
பொலனறுவையில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீட்டுக்குள் நேற்றிரவு நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர்.
அத்துடன், வீட்டில் நின்ற வாகனம் ஒன்றும் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டது.
மேலும் தெரியவருகையில்,
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீட்டுக்கு முன்பாக நேற்று மதியம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர்.
அத்துடன், பொலிஸாரின் தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை மீறி நேற்றிரவு ரொஷான் ரணசிங்க வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கி உள்ளனர்.
இதனைவிட ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்களான முன்னாள் அமைச்சர்கள் கெஹெலிய, காமினி லொக்குகேவின் வீடுகளை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிலியந்தலையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வீடு முன்பாக இருந்த பாரிய பதாதைக்குத் தீவைத்தனர்.
இதேபோன்று முன்னாள் அமைச்சர்கள், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முற்றுகையிடப்பட்டது.
அத்துடன், ஜனாதிபதியின் செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பவற்றை நேற்று மாலை முதல் முற்றுகையிட்டு இரவிரவாக பெரும் போராட்டங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.