
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் நேற்று இருவேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் ஜனாதிபதியை வெளியேற கோரி நேற்றுக் காலை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம் பல மாணவர்களின் பங்கெடுப்போடு, பல்கலையில் இருந்து யாழ். நகர் நோக்கி பேரணியாக சென்றது. பல்கலை முன்பாக ஆரம்பமான பேரணி பலாலி வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்து, அங்கிருந்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
பேருந்து நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் மாணவர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து, கஸ்தூரியார் வீதியூடாக, ஸ்ரான்லி வீதியை அடைந்து அங்கிருந்து ஆரியகுள சந்தியை அடைந்து, மீண்டும் பலாலி வீதியூடாக மாணவர்கள் பேரணி பல்கலையை அடைந்தது.
மாணவர்கள் பேரணியாக ஸ்ரான்லி வீதியூடாக செல்லும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகமான சிறிதர் தியேட்டர் முன்பு சில நிமிடங்கள் தரித்து நின்று அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இதேவேளை, உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திலிருந்து பேரணியை ஆரம்பித்து, மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவுறுத்தினர்.