ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதலுடன் நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் நேற்றைய நாள் முழுவதும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட பெரும் எடுப்பிலான போராட்டத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசை வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் கோருகின்றனர். கடந்த 31ஆம் திகதி இரவு ஜனாதிபதியின் மிரிஹான இல்லத்துக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் இல்லம் தாக்குதலுக்கு உள்ளானதுடன், ஜனாதிபதி கோத்தாபய தப்பியோட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 36 மணி நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு நாளிலும் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. மக்கள் போராட்டங்களை மழுங்கடித்து திசை திருப்பும் வகையில்;, அமைச்சர்கள் பதவி விலகுவதாக நேற்றுமுன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், அரசின் இந்த ஏமாற்று நாடகங்களுக்கு இடம்கொடாத மக்கள் நேற்றும் போராட்டங்களை மேற்கொண்டனர். நாடு முழுவதும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. வீதிகளில் கைக் குழந்தைகளுடனும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அத்துடன் சிங்கள மக்களின் ‘பெப்பரே’ இசையுடன் ராஜபக்சக்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பட்டன. பல இடங்களில் பொலிஸார் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இதேவேளை நேற்று இரவு கொழும்பில் போராட்டங்கள் உச்ச எழுச்சி பெற்றன.
காலிமுகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது. சுதந்திர சதுக்கம், விஜேயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் இல்லம் என்பனவும் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிந்தது. கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று இரவிரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனால் வீதிகளில் பயணங்கள் தடைப்பட்டன. அத்துடன் மின்சாரம் நிறுத்தப்பட்டபோது, கைத்தொலைபேசி வெளிச்சங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் செய்தி அச்சுக்குப் போகும் வரையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.