
மாடு கடத்தல் வழக்கில் அதிகார துஷ்பிரயோகம்! மன்னார் தவிசாளரை
பதவி நீக்கினார் ஆளுநர்!
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர், பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.
வடக்கு மாகாண ஆளுநர், அவரைப் பதவி நீக்கியுள்ளார். அது குறித்த விசேட வர்த்தமானிப் பத்திரிகை நேற்றுமாலை வெளியாகியுள்ளது.
பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம், தவிசாளரிடம் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணைசெய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதி அலுவலர் கந்தையா அரியநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவில் விசாரணை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனிநபர் விசாரணைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அந்த இறுதி அறிக்கையின் பிரகாரம்,
சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அந்தப்பதவியில் பணிகள், கடமைகளை நிறைவேற்றும்போது பிரதேச சபைகள் சட்டத்தின்படி குற்றங்கள் புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பிரதேச சபைகள் சட்டத்தின் 185 (1) உப பிரிவுகளின் மூலம் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மத ராஜா சார்ள்ஸ் ஆகிய நான், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹீரை 14ஆம் திகதி தொடக்கம் (இன்று) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவிகளிலிருந்து நீக்கம் செய்கிறேன்.” என்று வர்த்தமானி பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னாள் ரிஷாத் பதியூதினின் தலைமன்னார் பண்ணையில் பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் பெட்டியும் மாடு கடத்தல் வழக்கில் தலைமன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் உழவு இயந்திரமும் பெட்டியும் தடுத்துவைக்கப்பட்டிருந்தன.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தின் உதவியுடன் அவை பிரதேச சபைக்கு வழங்கப்பட்டவை என கடிதம் பெறப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படதற்கு அமைய உழவு இயந்திரமும் பெட்டியும் விடுவிக்கப்பட்டன.
எனினும் அந்த உழவு இயந்திரமும் பெட்டியும் பி்ரதேச சபையினால் பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டு மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களினால் விசாரணை கோரப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் முன்னாள் மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் முன்னிலையில் நடைபெறும் தனிநபர் குழுவை வடக்கு மாகாண ஆளுநர் நியமித்திருந்தார்.
முன்னாள் நீதிபதி முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் பல தரப்பட்டவர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. அதன் நிறைவில் விசாரணை அறிக்கை வடக்கு மாகாண ஆளுநரிடம் ஓகஸ்ட் 2ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
அந்த விசாரணை அறிக்கையில் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டப்பிரிவு உப பிரிவு 185 (1) (இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட அதிகார மீறல் குற்றத்தை மன்னார் பிரதேச சபை தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் இழைத்துள்ளார் என குறிப்பிடப்பட்டது. அதனடிப்படையில் அவர் பதவி நீக்கப்படுகிறார் என வடமாகாண ஆளுநர் அரசிதழ் ஊடாக பணித்துள்ளார்.





