
யாழ்ப்பாணம், ஏப் 5
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
தூய சக்தி தொழில்நுட்பங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் இணைந்த முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வுக்கு இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் ட்ரீனே ஜோரன்லி எஸ்கெடா நேரில் வருகை தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படடிருந்த போதிலும், இலங்கையில் தற்போது எழுந்துள்ள இடர்நிலை காரணமாக அவரது வருகை ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வில் நிகழ்நிலையில் இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் நிகழ்நிலையில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தச் செயற்றிட்டம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் பி.ரவிராஜன், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் செயற்றிட்ட இணைப்பாளர் பேராசிரியர் வி. தயாளன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில்,
புதிய கட்டத்தை நோக்கி நகரும் நோர்வே – யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூட்டாண்மை மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (HVL) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதன்கிழமை ஒரு புதியதொரு உடன்படிக்கையினூடு தங்கள் பிணைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.
தூய சக்தி தொழில்நுட்பங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி (Higher Education and Research in Clean Energy Technologies – HRNCET) நிகழ்ச்சித் திட்டம் மேம்பட்ட ஒரு நிலைக்கு நகர்வதற்கான முதற்படியாக இவ்வுடன்படிக்கை அமைகிறது.
உலகளாவிய கல்வி ஒத்துழைப்புக்கான நோர்வேஜியன் கூட்டாண்மை திட்டம் (NORPART) 2017 இல் மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்த நிதியுதவி அளித்தது. அந்நிகழ்ச்சித் திட்டத்தினூடு இருபல்கலைக்கழகங்களும் இணைந்து தூய சக்தி தொழில்நுட்பங்களில் (Clean Energy Technologies) உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது.
இதனூடாகப் பெறப்பட்ட பயனுள்ள பலாபலன்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. HRNCET 2.0 என்று பெயரிடப்பட்டுள்ள இப்புதிய நிகழ்ச்சித் திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை வருகை தந்துள்ள மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தினர் முன்னிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான நோர்வேஜியத் தூதுவர் ட்ரீனே ஜோரன்லி எஸ்கெடாலும் நிகழ்நிலையில் கலந்து கொள்ளவுள்ளார். HRNCET 2.0 இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் இணைந்த முனைவர்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களில் கவனம் செலுத்தும். அதைத்தொடர்ந்து 7ம் திகதி மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத் தூதுக்குழுவினர் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடத்திற்கும் விஜயம் செய்து, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட மிதக்கும் சூரியமின்கல ஆலையின் விரிவாக்கத்தில் பங்கேற்பார்கள்.
இத்தூதுக்குழுவில் நோர்வேஜியத் தனியார் துறையினரும் இணைந்துள்ளமை சிறப்பம்சமாகும். தூயசக்தி நிகழ்ச்சித் திட்டங்களை வணிகமயமாக்கலும் விரிவாக்கலும் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதோடு பல்கலைக்கழகங்களோடு இணைந்து ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.