முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் காவல் துறைப் பிரிவுக்கு உட்பட்ட மருதங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக சட்ட விரோத மணல் அகழ்வு பெருமளவில் இடம் பெற்று வருவதாகவும், இது தொடர்பில் ஐயங்குளம் காவல் துறையினர் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காது வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்து கின்றனர்.
முல்லைத்தீவு மருதங்குளம் பகுதியில் இடம் பெறும் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புத்து வெட்டுவான் கிராம அலுவலர் பிரிவில் காணப்படுகின்ற விவசாய குளமாக மருதங்குளம் காணப்படுகிறது.
இந்த குளத்தினுடைய அலைகரை பகுதியிலே பாரியளவில் சட்ட விரோத மணல் அகழ்வு எந்த விதமான அனுமதிகளும் இன்றி இடம் பெற்று வருகின்றது.
குளத்தின் உடைய நீரேந்து பகுதிக்கு உள்ளும் அதனோடு அண்டிய ஆற்று படுக்கைகளில் காணப் படுகின்ற மணல்கள் எந்த விதமான அனுமதிகளும் இன்றி சட்ட விரோதமாக குளத்தின் அலைகரை பகுதியிலேயே குவிக்கப்பட்டு டிப்பர் வாகனங்கள் அங்கு சென்று மணல் ஏற்றிச் செல்கின்ற போதும், காவல் துறையினர் இந்த விடயம் தொடர்பில் எந்த விதமான நடவடிக்கை களையும் மேற் கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சுமத்து கின்றனர்.
குறிப்பாக இந்த குளத்திற்கு பொறுப்பான நீர்பாசன திணைக்களத்தினரோ அல்லது பிரதேச செயலக அதிகாரிகளோ கிராம அலுவலரோ தங்களுடைய முறைப்பாடுகளை கேட்டு அந்த விடயங்களை பார்வையிட்டு இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எந்த விதமான நடவடிக்கை களையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் மக்கள், காவல் துறையினரின் உதவியுடன் இந்த செயற்பாடு இடம் பெறுகின்றது என்பதை தமக்கு வெளிப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இயற்கை வளங்கள் அழிக்கப் படுகின்ற செயற்பாடுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில்,சம்பந்த ப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தினரோ, பிரதேச செயலாளரோ, கிராம அலுவலரோ அல்லது காவல் துறையினரோ மிக விரைவாக குறித்த பகுதியில் இடம் பெறும் பாரிய அளவிலான சட்ட விரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி தங்களுடைய விவசாய குளத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு கோருகின்றனர் மக்கள்.