
ஜெருசலேம், ஏப் 06
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து கிடந்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் போர்க் குற்றம் புரிந்திருப்பதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை ரஷ்யா தரப்பு மறுத்துள்ளது. புச்சா படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புச்சா படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்ய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. புச்சா தொடர்பான புகைப்படங்களை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவற்றை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். படங்கள் மிகவும் பயங்கரமானவை. உக்ரைன் குடிமக்களின் துன்பம் மிகப்பெரியது, எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்கிறோம் என்றார்.