
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தன்னிச்சையான ஒரு சில செயற்பாடுகளின் விளைவாக நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இனம், மதம், மொழி என்பவற்றை கடந்து அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் நாடுதழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் நாளை தலவாக்கலையில் நடைபெறவிருக்கும் போராட்டத்துக்கும் என்னுடைய தலைமையில் பதுளையில் நடைபெறவிருக்கும் போராட்டத்துக்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவை வழங்குகின்றது.
மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், அவர்களின் தொழில் பாதுகாப்பையும், இருப்பையும் உறுதி செய்யவும், அரசாங்கத்தின் பொய்த்துப்போன வாக்குகளுக்கு பதிலடி வழங்கவும், புதியதொரு அரசியல் மாற்றத்திற்கு வழிகூறவும் களத்தில் நாளை நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.