
‘எங்களுடைய இன்னல்களை சிங்கள மக்கள் தற்போதுதான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பினரையும் கோட்டாபய ஒன்று சேர்த்திருக்கிறார். அவருக்கு நன்றி’ என கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணிநேர போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதிகளில் இளைஞர், யுவதிகளே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கொழும்பில் வாழும் தமிழர்கள் சிலர் நேற்றிரவு போராட்டத்தை நடத்தியிருந்தனர். கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற விதத்தில் அனைத்து தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில், கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இளைஞர், யுவதிகள் நேற்றிரவு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது அனைத்து இன மக்களையும் ஒன்று சேர்த்தமைக்காக தான் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு நன்றி தெரிவிப்பதாக கொழும்பைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகின்றார்.
”சரியான தூர நோக்கு சிந்தனை இல்லாத காரணத்தினால் தான் இலங்கை இன்று இந்த மாதிரியான நிலைமையை எதிர்கொண்டிருக்கு. அது மட்டும் இல்ல. இந்த பிரச்சினையால உண்மையில கோட்டாபயவிற்கு நன்றி சொல்லனும். நாட்டு மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்காங்க. இவ்வளவு நாளா தமிழ் மக்கள தப்பா நினைச்சிட்டு இருந்த எல்லாரும், இப்ப எல்லாம் ஒன்று சேர்ந்திருக்காங்க. சிங்கள மக்களுக்கும் 30 வருஷத்துக்கு முன்னால இருந்து தமிழ் மக்கள்ட குரலுக்கு என்ன நடந்தது, எதனால அவங்க பிரச்சினைகள மேற்கொண்டாங்க என்பது சிங்கள மக்களுக்கு இப்ப தான் தெரிய வந்திருக்கு. அதால எல்லாரும் ஒன்று சேர்ந்திருக்காங்க. இது அப்படியே தொடரும்னு நினைக்கிறோம்” என அவர் தெரிவிக்கின்றார்.