
குருநாகலில் உள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகம் நேற்று இரவு மக்களால் முற்றுகையிடப்பட்டது. அதேநேரம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களும் அங்கு கூடியதால் பதற்ற நிலைமை காணப்பட்டது.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒருபோதும் பதவி விலக மாட்டார் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை அவரது அலுவலகத்துக்கு வெளியே கூடிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம், குருநாகல் நகர சபைத் தலைவர் மற்றும் ஆதரவாளர்கள், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகத்தில் கூடியிருந்தனர்.
தங்களை மீறி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் முடியைக் கூடப் பிடுங்க முடியாது என்று, நகர சபைத் தலைவர் பேஸ்புக்கில் காணொலிப் பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார்.
அலுவலகத்துக்கு வெளியே மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். அதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.