
கொழும்பு, ஏப் 07
தமிழ் மண்ணிற்காக போராடிய இளைஞர்கள் பலர் அநியாகங்களுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களை பற்றியும் சிந்தித்து அதற்காகவும் போராடுங்கள் என சி.சிறீதரன் பாராளுமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிறீதரன் கூறியதாவது, தமிழ் பிரதேசமான எழுவைதீவில் தனியாருக்கு சொந்தமான காணியை படையினருக்கு வழங்குவதற்கு அளவீடுகள் செய்யப்படுகின்றன.
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன்கோவிலில் இராணுவத்தினர் அளவீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் கலைக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற இந்த சமயத்தில் கூட தமிழர்கள் மத்தியில் இவ்வாறான ஒரு அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
பொருளாதாரத்தின் தடைகளை இன்றைய காலத்தில் தான் சிங்கள மக்கள் சந்திக்கின்றார்கள். ஆனால், அரசாங்கத்தால் திட்டமிட்டு பொருட்கள் அனுப்பப்படாமல் யுத்த காலத்தில் 20 வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்துள்ளார்கள்.
சிங்கள தலைவர்கள், சிங்கள இளைஞர் யுவதிகள் தார்மீக அடிப்படையில் சிந்திக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாள் பிறந்த குழந்தை கூட போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. சிங்கள இளைஞர்கள் சிங்கக் கொடிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
தமிழர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் சிங்கக் கொடி, பாற்சோறுகளை வழங்கிய சிங்கள தலைவர்களை இன்று வீட்டுக்குத் துரத்தும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.
2009 ஆம் ஆண்டு தமிழ் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். மகிந்த ராஜபக்ஷவின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். வவுனியாவில் ஒப்படைக்கப்பட்ட பல குழந்தைகளை இன்றும் காணவில்லை. அதனை விட, ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகள் உட்பட பலர் தமது தாய் தந்தைகளின் வருகைகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நல்லெண்ணம் கிடையாது என்றார்.