
நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதியை பதவி விலகுமாறும் கோரி பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை கடந்த சில தினங்களாக அரச தரப்பு உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு முன்னாலும் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் சில அமைச்சர்கள் மற்றும்பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களை முற்றுகையிடும் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடைவளர்ப்பு, சிறுபொருளாதார பயிர்செய்கை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் எமது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டும்! சத்தம் போட வேண்டும் ! எங்களுக்கு கல் எறிய வேண்டும் என்று கேள்வி பதிலாக தனது கருத்தை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டும்! சத்தம் போட வேண்டும் ! எங்களுக்கு கல் எறிய வேண்டும்! என்று பேசும் மாவட்ட அரசியல் வாதிகளும், அவர்கள் சார்ந்தவர்களும் சொல்வதில் நியாயம் உள்ளது.
ஏன் என்றால் நாங்கள் கடந்த ஒன்றரை வருடம் அரசாங்கத்தோடு இணைந்து எமது மாவட்ட மக்களுக்கு செய்த துரோகங்கள் பல….
அவற்றில் சிலவற்றை சொல்கிறேன்.
01. 350 க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுத்தமை. இதில் முன்னால் ஆண், பெண் போராளி பிள்ளைகளும் அடங்குவர். ஏன் என்றா இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே எமது வீட்டுக்கு நீங்கள் கல் எறிய வேண்டும் . நீங்கள் வீட்டைச் சுற்றி ஆர்பாட்டம் பண்ணத் தான் வேண்டும் .
02. 16000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எம்மால் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். ஏன் என்றால் உங்கள் பார்வையில் இதுவும் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
03. விவசாயத்துறையில் கடந்த காலங்களில் புனரமைக்கப்படாத குளங்கள் 88 , மற்றும் அணைக்கட்டுக்களை அமைத்து விவசாயத்திற்கு உதவியுள்ளோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
04. மீன் பிடித் துறையில் வேகமாக எழுவான் கரையில் அபகரிக்கப்பட்டு வந்த கடற்கரை வளத்தை முடிந்த வரை , தடுத்து நிறுத்தி நம்மவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
05. கல்வித் துறையில் கடந்த நல்லாட்சியில் ஒரு பாடசாலையைக்கூட தேசிய பாடசாலையாக மாற்ற எவ்வளவோ கஸ்டப்பட்டோம். ஆனா இந்த குறுகிய காலத்துக்குள் 15 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி கொடுத்துள்ளோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
06. குறுகிய காலத்தில் விளையாட்டுத் துறையில் 12 கிராமிய மைதானங்களை புனரமைத்து கொடுத்துள்ளோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
07. குறுகிய காலத்தில் இரண்டு நகரங்களை அபிவிருத்தி செய்துள்ளோம். இன்று அவை காத்தாங்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்று ஓரளவாவது காட்சி அளிக்கிறது . ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
08. கடந்த நல்லாட்சி காலத்தில் 188 நாட்களுக்கு மேல் போராடியும் பட்டதாரி பிள்ளைகள் ஏமாற்றப்பட்டார்கள். பலருக்கு 45 வயது கடந்த நிலையில் வேலை வாய்ப்பை இழந்தார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டதாரிகளில் எமது மாவட்ட பிள்ளைகள் 2147 பேர் வேலை வாய்ப்பு பெற்றார்கள் . ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும்.
09. கடந்த 30 வருடத்திற்குமேல் விடுவிக்கப்படாமல் இருந்த கும்புறுமூலை இராணுவமுகாம் காணியை பாதுகாப்பு தரப்புடன் பேசி விடுவித்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
10. தொடர்ச்சியாக ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ,பிரதமர், நீதி அமைச்சர் உட்பட பலருடன் பேசி ஒரே தடவையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட காரணமாயிருந்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
11. மிகவும் குறைந்த தொழினுட்ப பீடங்களே ஒதுக்கப்பட்ட நேரத்தில், பின் தங்கிய கிராமங்களை அதிகம் உள்ளடக்கிய வாகரைப் பிரதேச மக்களது பிள்ளைகளின் தொழினுட்ப கல்வியை விருத்தி செய்யும் பொருட்டு முதலாவது தொழினுட்ப பீடத்தை பெற்றுக் கொடுத்தோம். ஏன் என்றா இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
12.கடந்த காலத்தில் மாகாணத்தில் தமிழர் ஒருவர் கல்வி அமைச்சராக இருந்தும்கூட தரமுயர்த்த முடியாத சில பாடசாலைகளை தரமுயர்த்தினோம். சுரவணயடியூற்று கிராமத்திற்கு முதலாவது பாடசாலையை பெற்றுக்கொடுத்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
13. கடந்த நல்லாட்சி காலத்தில் தண்ணீர் அந்தா தாறோம் இந்தா தாறோம் என தண்ணி காட்டிய போது, நாம் படுவான்கரை மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுக்க இதுவரை 300 மில்லியன் நிதிக்கு மேல் பெற்றுக் கொடுத்து குடி நீரையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
14. குறுகிய காலத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட சிறு , நடுத்தர பாலங்களை அமைத்து கிராம மக்களின் போக்குவரத்துக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
15.கிராம மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக சுமார் 2500 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை வீதிக் கட்டமைப்பிற்ககு பெற்றுக் கொடுத்தோம். கிராமங்களில் இருந்து நகருக்கு வருவதற்கான சரியான வீதிக் கட்டமைப்பு, பாலம் வசதிகள் இல்லாமல் வழியில் எத்தனையோ பேர் இறந்த நிலையில் இவற்றை செய்து கொடுத்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
16.பண்பாட்டு மீட்பு பாசறை மூலம் மாகாண மட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஈழத்தமிழரின் தனித்துவமான கலையான நாட்டுக் கூத்தை மீண்டும் பாடசாலை மட்ட போட்டிகளில் கொண்டு வந்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
17.இலங்கையில் பஸ் நூலகத் திட்டத்தில் முதலாவது திட்டத்தை பெற்றுக் கொடுத்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
18. குறுகிய காலத்தில் 03 சிறுவர் பூங்காக்களை சிறுவர்களுக்காக அமைத்துக் கொடுத்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
19. குறுகிய காலத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுத்தோம் பல காணி அபகரிப்புக்களை தடுத்து நிறுத்தினோம். அபிவிருத்தி குழுவில் தமிழர்கள் நாம் இருப்பதால் சாத்தியமாகியது.ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
20. குறுகிய காலத்தில் வாகரை புனானை கிழக்கினை ஓட்டமாவடியுடன் இணைக்கும் திட்டத்தினை தடுத்து நிறுத்தினோம். ஏன் என்றா இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே இதற்காக நீங்கள் வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
21.முடிந்தளவு குறுகிய காலத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகள் , வீட்டுத் திருத்தம், மலசல கூடம் ஆகிய பல வசதிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே நீங்கள் எமது வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
22. நீண்ட காலமாக இழப்பீட்டிற்கான நிவாரணங்களை பெறாத 450 க்கு மேற்பட்டவர்களுக்கு இழப்பீட்டுக்கான நஸ்ட ஈட்டு தொகைகளை பெற்றுக் கொடுத்தோம். ஏன் என்றால் இதுவும் உங்கள் பார்வையில் துரோகம் தானே? ஆகவே நீங்கள் எமது வீட்டுக்கு கல் எறிய வேண்டும் . வீட்டைச் சுற்றி ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டும் .
இவ்வளவு வேலையையும் எம் சமூகத்துக்காக களரீதியாக செய்த, செய்து கொண்டு இருக்கின்ற எமக்கு கல் எறிய வேண்டும் ! முற்றுகை இடவேண்டும் என்றால் ! இவ்வளவு காலமும் எதுவுமே செய்யாமல் ,வெறுமனே தமிழர்களின் பிரச்சினைகளையும், அவர்களின் கண்ணீரையும் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும், பிழைப்பு வாத அரசியவாதிகளுக்கு என்ன செய்ய வேண்டும் ? மக்களுக்கு தெரியும் ….நாம் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது சராணகதி அரசியல் செய்யவதற்காக அல்ல.
எம்மால் முடிந்த சேவையை கடந்த ஒன்றரை வருட காலத்தில் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறோம். அது எமது பயணத்தில் ஒன்றாய் பயணிப்பவர்களுக்கும், எமது பயணத்தை அவதானிப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும் . தற்போதைய பிரச்சினை நாட்டில் உள்ள சாதாரண மக்கள் இன்று வீதியில் நிற்கிறார்கள் . பல துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். ஒரு பிரிவினர் மக்களின் பிரச்சினையை வைத்து ஆட்சிக்கு வர துடிப்பவர்கள்.
அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் இதே நிலமை அவர்களுக்கு எதிராக மாறும் என்பதை மறந்து விடுகிறார்கள் . அது நடக்கும் போதே அவர்களுக்கு புரியும் .இப்போது நாட்டு மக்களுக்குத் தேவை தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணத்தக்கவர்களே! ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா? இரண்டு பிரிவினருக்கும் வாக்களித்தவர்கள் வீதியில் நிற்கிறார்கள் . அவர்களுக்கான சரியான தீர்வை நாம் முன் வைக்க வேண்டும் .
அது தான் காலத்தின் தேவை. ஜனாதிபதியை மட்டுமல்ல 225 பேரையும் மக்கள்தான் வீட்டுக்கு போகச் சொல்லுகிறார்கள். அதையும் புரிந்து கொள்ள வேண்டும் . இப்போது யார் போவது? யார் வருவது ? என்பது முக்கியமல்ல. சாதாரண மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் . அதற்கு எல்லோரும் கட்சி பேதம் மறந்து கைகோர்க்க வேண்டும் .
குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க முயற்சிக்க கூடாது. அதாவது அரசியல் இலாபம் தேடக் கூடாது.எமது வீட்டுக்கு முன்னால் சத்தம் போட வேண்டும் ! எங்களுக்கு கல் எறிய வேண்டும்! என்று பேசுபவர்கள் யாரேன்று எமக்குத் தெரியும் . 2015ல் இருந்து இன்று வரை ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தோற்கடிக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு வேலை செய்த, செய்து கொண்டு இருப்பவர்களே! குறிப்பிட்ட சில அரசியல் வாதிகளும் , அவர்கள் சார்ந்தவர்ளுமே! அவர்கள் எப்போதும் மற்றவர் சட்டியில் என்ன அவிகிறது என்பதையே பார்ப்பார்கள். ஆனால் தங்கள் சட்டியில் என்ன கருகுகின்றது என்று பார்க்க மாட்டார்கள் .
ஒரு வகையில் நமக்கு அவர்கள் விமர்சனம் , விசமத்னம் என்ற அடிப்படையில் எமக்கு இலவச விளம்பரம் செய்கிறார்கள் . அவர்கள் தங்களைப் பற்றி, தங்கள் குடும்பங்களின் முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் நேரங்களை விட நம்மை பற்றி சிந்திக்கும் நேரங்கள் அதிகம் . முற்போக்கு பிள்ளைகள் யாரும் மற்றவர்களை விமர்சிப்பதையோ! முகப்புத்தகங்களில் வாதிடுவதையோ! நிறுத்தி , அந்த பெறுமதியான நேரத்தை உங்கள், குடும்ப முன்னேற்றத்திற்காக, நம்மை நம்பியிருக்கும் மக்கள் நன்மைக்காக செலவிடுங்கள்.
இது என் அன்பான வேண்டுகோள். இவர்களுக்கு எம் முற்போக்கு பிள்ளைகள் கொடுக்கும் பதிலடி அடுத்தடுத்த எமது வெற்றிகளே! எம்மை பொறுத்தவரை எம் மக்கள் நலனுக்காக கூடுதலான நேரங்களை செலவிடுகிறோமே தவிர! மற்றவர்களுக்கு குழி தோண்டுவதற்கு செலவிடுவது இல்லை .
எமது முற்போக்குத் தமிழ் உறவுகளுடன் கலந்து ஆலோசித்து, எமது மக்களின் நலனோம்புகையை அடிப்படையாக வைத்தே எமது தீர்மானங்கள் , முடிவுகள் அமையும். எம்மை பொறுத்தவரை உரிமையோடு கூடிய அபிவிருத்திசார் அரசியல் என்ற நோக்கில் பயணிப்பவர்கள். அதுதான் இந்நாட்டில் எம் தமிழினத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் என்ற ஆழமான நம்பிக்கை எமக்குண்டு. அதை யதார்த்தமாக கண்டுள்ளோம் . கொரானாவிலிருந்து எப்படி மீண்டு வந்தோமோ, அது போன்று இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்தும் நாம் மீண்டெழ, எல்லா வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு, எல்லோரும் கரம் கோர்த்து நாட்டு மக்களின் நன்மைக்காக நல்ல திட்டங்களையும் , தீர்மானங்களையும் முன் வைத்து செயற்பட வேண்டும் . “வலிமையான அரசியல் கட்டமைப்பினூடாக, எம்மினத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக எமது அரசியல் பயணம் தொடரும்….”என அதில் குறிப்பிட்டுள்ளார்.