
நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் செய்திசேகரிப்பு பணிகளில் ஈடுபட்ட 9 பத்திரிகையாளர்கள் இதுவரை காயமமைந்துள்ளதாக எல்லைகள் அற்ற நிருபர் அமைப்பு அறிக்கையிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
மார்ச் 31ம் திகதி முதல் இலங்கையில் இடம்பெறும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன பல பத்திரிகையாளர்கள் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டனர் தாக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு 9 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் ஊடகங்கள் தங்கள் பணியை ஆற்றுவதற்கு அனுமதிக்கவேண்டும் இது தற்போதைய நெருக்கடியை சிறந்த முறையில் தீர்ப்பதற்கு உதவும் எனவும் எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.அவசரகால சட்டத்தின் துணையுடன் ஊரடங்கு சட்டம் மூன்று நாட்களிற்கு அறிவிக்கப்பட்டிருந்தவேளை அரசாங்கம் சமூக ஊடகங்களை மூன்றாம் திகதி முதல் முடக்கியமைக்கு செய்திகள் தகவல்கள் வெளியாவதை முடக்குவதே தெளிவான காரணம் என எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
31ம் திகதி மாலை தலைநகர் கொழும்பில் வெடித்த தன்னெழுச்சியான பாரிய ஆர்ப்பாட்டங்களிற்கும் பொருளாதார நெருக்கடி தட்டுப்பாடுகள் வாழ்க்கை தரவீழ்ச்சி ஆகியவையே காரணம் என தெரிவித்துள்ள ஊடகசுதந்திர அமைப்பு இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.
15 மணிநேர முழுமையான முடக்கலிற்கு பின்னர் சமூக ஊடகங்கள் மீதான முடக்கம் தளர்த்தப்பட்ட போதிலும் இணையவேகம் மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது என பல தரப்பினர் எங்களிற்கு தெரிவித்துள்ளனர் என எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திகளை சேகரிக்கமுயலும் செய்தியாளர்கள் பொலிஸாரின் வன்முறையுடன் கூடிய தடுக்கும் நடவடிக்கைளை எதிர்கொண்டுள்ளனர்,குறிப்பாக விசேட அதிரடிப்படையினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு கலந்தாய்வே சிறந்த வழி -இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு அனைத்து தரப்பினரும் நம்பகதன்மை மிக்க உறுதிப்படுத்தப்பட்ட உடனடி செய்தி அறிக்கையிடல் மூலம் பயன்பெறமுடியும்.
அவ்வாறான செய்தி அறிக்கையிடலை செய்வது பத்திரிகையாளர்களின் பணி என எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பின் ஆசியா பசுபிக்கிற்கான தலைவர் டானியல் பஸ்டார்ட் தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக உடனடியாக இலங்கைக்கான அனைத்து தொடர்பாடல்களையும் மீள ஏற்படுத்தவேண்டும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தியாளர்கள் சுதந்திரமாக சேகரிப்பதற்கு அனுமதிக்கவேண்டும், அவசரகாலநிலையின் கீழ் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.