கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள நீர்பாசன திணைக்களம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது.
இதன்போது, சிறுபோக செய்கைக்கு கடந்த காலங்களை போன்றல்லாது இம்முறை நீர் வழங்குதல் மட்டுப்படுத்தப்பட்டமையை கண்டித்தும், சிறுபோக செய்கைக்கான நீரை முழுமையாக வழங்குமாறு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது விவசாயிகளால் மாவட்ட அரசா அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த மகஜரில் இரணைமடு குளத்தில் 34 அடி 8 அங்குலம் நீர் இருக்கம் நிலையில், 15750 ஏக்கரில் சிறுபோக செய்கை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தும், 6 ஏக்கர் தொடக்கம் 25 ஏக்கர் வரை காணிகள் உடைய விவசாயிகளிற்கு 4 ஏக்கர் செய்கை வழங்கப்படும் எனவும் தீர்மானித்துள்ளமை வாழ்வாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு 10 ஏக்கர் காணி உள்ளவர்கட்கு 5 ஏக்கர் செய்கை மேற்கொள்ளவும், 15 ஏக்கர் வரை காணி உள்ளவர்களிற்கு 6 ஏக்கர் செய்கை மேற்கொள்ளவும், 20 ஏக்கர் நிலம் உள்ளவர்களிற்கு 8 ஏக்கர் செய்கை மேற்கொள்ளவும், 25 ஏக்கரிற்கு மேற்பட்ட காணி உள்ளவர்களிற்கு 50 வீதம் எனவும் நீர்பாசனம் வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த காலங்களைப்போன்று தமக்கு நீர்பாசனம் வழங்கும்படியாக தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், மாவட்ட மேலதிக அரச அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன், விவசாயிகளால் வழங்கப்பட்ட மகஜரையும் அரச அதிபர் பெற்றுக்கொண்டார்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் குறிப்பிடுகையில்,
இவ்விடயம் சிறுபோக செய்கை தொடர்பான முன்னேற்பாடு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடாத்தப்படும் , அதில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித எதிர்ப்புகளும் காணப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஏ9 வீதி வழியாக டிப்போ சந்திவரை சென்ற போராட்டக்காரர்கள் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்து கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தது.
குறி்த்த போராட்டத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் வைத்தியர் விஜயராஜன், மாவட்ட அமைப்பாளர்களான மரியசீலன், ரஞ்சன் ஆகியோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.






