
இலங்கையில் கடதாசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் டொலர் நெருக்கடிக்கு மத்தியில் கடன் பத்திரங்கள் வழங்கப்படாமை நாட்டில் கடதாசி தட்டுப்பாட்டினை மோசமாக்கியுள்ளது என சங்கத்தின் பொருளாளரான செல்வம் கெட்டிஸ் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் இன்னும் தீர்வை வழங்கவில்லை.
இது தொடர்பாக தொழில் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை வினவியபோது,
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கடதாசி இறக்குமதிக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, முடிந்தவரை கடதாசிப் பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறு உள்துறை அமைச்சு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக செயலிகளை மாற்றாக பயன்படுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளரான எம்.எச்.எம்.சித்ரானந்தா தெரிவித்தார்.