
நாட்டில் உள்ள சிங்கள மக்கள் தற்போது அரசின் உண்மை முகத்தை அறிந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
புலம் பெயர் தேசத்தின் இணையம் மூலமான, கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது வீதியில் இறங்கி போராடும் சிங்கள மக்கள் தமிழ் மக்களிற்கான பிரைச்சினைகளுக்கு தீர்வு வரும் பொழுது இப்படியானவொரு மனநிலையில் இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம்.
எனினும் தற்போது சிறிய மாற்றம் எற்பட்டிருக்கின்றது. இனரீதியாக அரசாங்கம் மக்களை ஏமாற்றி தங்களது அரசியல் இலாபத்தினை தக்கவைத்துக் கொள்வதற்காக செயற்பட்டுக் கொண்டுள்ளார்கள் என சிங்கள இளைஞர்களிடையே கொஞ்சம் புலப்பட ஆரம்பித்துவிட்டது.
ஆனால் எவ்வளவு காலம் இந்நிலைமை அவர்களிடம் நிலைத்திருக்கம் என்பது தெரியவில்லை. நாளை ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு மாறும் என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
அரசாங்கம் மாறினால் மட்டும் எமது பிரச்சினைகள் தீரப்போவது இல்லை. சர்வதேச நாடுகள் அல்லது பிராந்திய உலக வல்லரசின் மறைகரங்கள் ஏதோ ஒரு வகையில் செயற்பட்டால் மட்டுமே தீர்வினைப் பெறமுடியும்.
இவர்கள் எங்களுக்கான சூழ்நிலைகளை மாற்றுவார்களா? இவ்வாறு தமிழர்கள் மீது நிரந்தரமான நிதர்சனமான ஒரு சூழ்நிலை இல்லாத நிலைதான் காணப்படுகின்றது.- என்றார்.