பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் புத்தளம் – பாலாவியில் இன்று மாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓன்று இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட புத்தளம், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் நகர சபை உறுப்பினர்கள், சமிக ஆர்வலர்கள் உள்ளிட்ட தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் என ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது “நீதமான, சுதந்திரமான மனித உரிமைகளை மதிக்கின்ற ஆட்சி வேண்டும்”, “அடிப்படை பொருட்களுக்கு நியாயமான விலை வேண்டும்”, “மக்களின் போராட்டம் ஆட்சி மாற்றம் கேட்டு அல்ல, உங்களை மாற்ற வேண்டும் என்பதே” என இதுபோன்ற தமிழ், சிங்கள மொழிகளில் வாசகங்கள் எழுதப்பட்ட பல சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்த நாட்டையும், உங்களை நம்பி வாக்களித்த இந்த நாட்டு மக்களையும் உங்களால் பாதுகாக்க முடியவில்லை. எனவே, தகுதியானவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு கொள்ளையடித்த பணத்தை கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விடுங்கள் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
இதன்போது புத்தளம் தலைமையக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

