
வாஷிங்டன், ஏப் 7
உக்ரைன் மீது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதைக்கண்டித்து ரஷ்யாமீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இருப்பினும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் அதை இந்தியா கண்டுகொள்ளவில்லை. இதனால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்ற தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியது.
எரிசக்தி இறக்குமதியை பன்முகப்படுத்த இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுதொடர்பில் வெள்ளை மாளிகை செய்தியாளர் செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
ரஷ்ய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை இந்தியா துரிதப்படுத்த வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. வெளிப்படையாக, அந்த முடிவுகள் தனிப்பட்ட நாடுகளால் எடுக்கப்படுகின்றன.
இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ஒன்று முதல் இரண்டு சதவிகித எண்ணெயை மட்டுமே இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் இறக்குமதியை பன்முகப்படுத்தவும் நம்பகமான விநியோகஸ்தராக பணியாற்றவும் இந்தியாவிற்கு ஆதரவளிக்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் கடந்த வாரம் புதுடெல்லியில் ரஷ்ய பொருளாதார தடைகள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.