
யாழ். மணியந்தோட்டம் பகுதியில் உள்ள பெண்ணொருவர், கடந்த மாதம் முதலாம் திகதி காணாமல் போயுள்ளதாக அவருடைய பிள்ளைகள் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
48 வயதுடைய குறித்த பெண், மணியந்தோட்டம் பகுதியிலுள்ள நபரொருவருக்கு மூன்று லட்சம் பணம் வழங்கியதாகவும், அதனை மீளப்பெற சென்ற நிலையிலேயே அவர் காணாமல் போயுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் கொலை செய்யப்பட்டு மணியந்தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது மோட்டார் சைக்கிளும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலத்தையும், மோட்டார் சைக்கிளையும் நாளை நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் மீட்பதற்குரிய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பெண் புதைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்த கணவரும் மனைவி உட்பட 3 பேர் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்