
இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் மியான்மார் கிளர்ச்சிக் குழுக்களுக்காக ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முயன்ற ஜப்பானின் யாகூசா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு ஒன்றின் தலைவரையும் மூன்று தாய்லாந்து ஆண்களையும் கைது செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகேஸிரி எபிசாவா, சோம்பக் ருக்ரசரனி, சோம்போப் சிங்கசிரி மற்றும் சுக்சன் ஜுல்லானன் என்ற இந்த நால்வரும் நியூயார்க்கில் வைத்து கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் போதைப்பொருள், ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்தக்குழுவினர், இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக தானியங்கி ஆயுதங்கள், ஏவுகணைகள், இயந்திர துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த முயற்சி எந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது என்பதை அமெரிக்க நீதித்துறை தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் 2021, பெப்ரவரி 3 ஆம் திகதியன்று எபிசாவாவும் ஒரு நண்பர் ஒருவரும், டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு சென்று இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் தாங்கி மற்றும் எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட அமெரிக்க இராணுவ ஆயுதங்களின் பட்டியலை பார்வையிட்டனர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை நியூயோர்க்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அமெரிக்காவுக்கு எப்படி வந்தனர் என்பதை அமெரிக்க நீதித்துறை தெரிவிக்கவில்லை.