இராணுவ நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யவேண்டும்! கஜேந்திரகுமார் எச்சரிக்கை

அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லும் முன்னர், இலங்கையில் பாதுகாப்புக்கு குறிப்பாக இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி தொடர்பில் மீள் பரிசீலனை செய்யவேண்டும். இல்லையெனில் இலங்கையில் இராணுவத்துக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் நிபந்தனைகளை விதிக்குமாறு தாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், 2021 ஆம் ஆண்டில் பாதீட்டில் படைத்தரப்புக்கு 10.6 வீத நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும் 2022ம் ஆண்டில் இந்த ஒதுக்கீடு 12.3 வீதமாக அதிகரிக்கப்பட்டது.

இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான ஒதுக்கீடுகள் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் இடம்பெறாத காலத்தில் இலங்கையை தவிர இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட்ட வேறு எந்த நாடுகளும் இராணுவத்துக்கு பாரிய தொகையை ஒதுக்குவதில்லை.

இஸ்ரேலிலில் உள்ள நிலைமையை கருத்திற்கொண்டு அங்கு அதிக நிதி பாதுகாப்புக்கு ஒதுக்கப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாரிய தொகையை படைத்தரப்புக்கு ஒதுக்குவதன் மூலம் வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் குறிப்பாக வன்னியில் ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாடுகள் பாதுகாப்புக்கு நிதியை ஒதுக்கும்போது வெளியில் இருந்து வரும் எதிரிகளை கருத்திற்கொள்கின்றன.

எனினும் இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை எதிரிகளாக கருத்திற்கொண்டே பாதுகாப்பு நிதி ஒதுக்கப்படுவதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்

வடக்கில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 6ஆயிரம் ரூபா மாத்திரமே வேதனமாக வழங்கப்படுகிறது.

இதனை கொண்டு ஒருவருக்கு ஒரு வாரத்துக்காவது சமாளிக்கமுடியாத நிலை உள்ளது.

எனினும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர் ஒருவருக்கு 30ஆயிரம் ரூபா வேதனமாக வழங்கப்படுகிறது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

எனவே அரசாங்கம் உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளாதுபோனால், இலங்கையில் இராணுவத்துக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் நிபந்தனைகளை விதிக்குமாறு தாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுக்கப்போவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *