யாழ்ப்பாணம்,ஏப் 8
கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியில் வசித்து வந்த பிரதீபன் ஜெசிந்தா என்ற 42 வயதுப் பெண்னை காணவில்லை என்ற செய்தியும், இந்தப் பெண் கொடுக்கல் வாங்கல் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐதீகமும் நிலவிய நிலையில் தற்பொழுது அது உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனை பிரிந்து வாழும் இந்தப் பெண், வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அவரிடம் ரூ. 3 லட்சம் பணம் வாங்கிய ஒருவர், பணத்தை திருப்பி கொடுக்காமல், பெண்ணை பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்தமை விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பணம் வாங்கச் சென்ற அந்தப்பெண்ணிடம் ஏற்பட்ட தகராறு, கொலை செய்யுமளவிற்கு நகர்ந்து சென்றுள்ளது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாக கணவனுடன் மனைவியுமாக இருவரும் கொலை செய்துள்ளதோடு, பிற இளைஞன் ஒருவனின் உதவியை நாடி, கொலை செய்யப்பட்ட அப்பெண்ணையும் அவரது மோட்டார் வாகனத்தையும் தமது வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளனர்.
நீதி மன்ற உத்தரவைப் பெற்று, புதைக்கப்பட்ட இடத்தை நோக்கி விரைந்த பொலிஸார்,
புதைக்கப்பட்ட இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளையும், அழுகிய நிலையில் காணப்பட்ட உடலையும் மீட்டுள்ளனர்.
சினிமாப்பாணியில் நிகழ்ந்த இக்கொலைச் சம்பவம் அவ்விடத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


