எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசுவதால் பதில் கிடைக்காது! அஹமட் புர்கான் கிண்டல்

நாட்டு மக்களை வேண்டுமென்று ஆவேசத்திற்கு உட்படுத்தி எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசுவது போன்று தனது பேச்சுக்களை பேசி வருகின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் சனிக்கிழமை (9) இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையை பயன்படுத்தி எதிர்கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிர்கட்சி தலைவரும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

எமது நாடு தற்போது நெருக்கடிகளை சந்தித்துள்ள சூழ்நிலையில் நாட்டு மக்களை வேண்டுமென்று ஆவேசத்திற்கு உட்படுத்தி எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசுவது போன்று தனது பேச்சுக்களை பேசி வருகின்றார் .

உண்மையில் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசினால் எவரிடம் இருந்தும் பதில் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்.

உடனடியாக அரசாங்கம் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டும் அல்லது ஜனாதிபதி அவர்கள் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி தலைவர் கூறுவதானது என்ன பொருளாதார கொள்கையை முன்வைத்து இவ்வாறு கூறுகின்றார் என்ற ஆதங்கமே மிகப்பெரிய கேள்வியாக எழுகின்றது.

சஜீத் பிரேமதாச நாளை பதவியேற்றால் கூட அவர் கடல் நீரினை சுத்திகரித்து எரிபொருளினை வழங்குவதற்குரிய திட்டம் ஒன்றினை முன்வைத்திருக்கின்றாரா என கேட்க விரும்புகின்றேன்.

மக்களை தற்போது உசுப்பேத்துகின்ற எதிர்கட்சிகளின் செயற்பாட்டை நகைச்சுவையாகவே நாம் பார்க்க முடியும்.

வீணான விமர்சனங்களை அவர்கள் முன்வைக்க பார்க்கின்றார்கள்.

இக்காலகட்டத்தில் நாட்டு மக்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்நிலை தொடர்ச்சியாக இடம்பெற போவதில்லை.

இதற்கான தீர்வினை அரசாங்கம் மிக விரைவில் முன்வைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

எதிர்கட்சியினர் தொடரச்சியாக விலையேற்றம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்துள்ள போதிலும் அதற்கான தீர்வுகளை முன்வைக்காமல் மக்களை குழப்பி ஆட்சியை கைப்பற்றும் கனவில் இருக்கின்றார்கள் .

இக்கனவு பலிக்காது என்பதை அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *