ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தற்போது வரையில் தீவிரமாக நடைபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பின் பல பகுதிகளிலிருந்தும் திரண்ட மக்கள், கொழும்பு காலி முகத்திடலில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதல் காலி முகத்திடல் பகுதியிலும், ஜனாதிபதி காரியாலயத்திற்கு அருகில் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திலும், தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக, குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் பகுதிகளில் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இணைய வசதிகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதிகளில் இருந்து வெளிநபர்களை தொடர்புகொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் தொலைபேசிகளை முடக்கும் ஜேம்மர் பொருத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் அனைத்து இன மக்களும் பங்குகொண்டிருப்பதாக தெரியவருகிறது.
குறிப்பாக இஸ்லாமியர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் இன்று போராட்டத்திற்கு மத்தியில், நடு வீதியில் அமர்ந்து இறை வழிபாட்டுடன் நோன்பை திறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்களின் இறை வழிபாட்டு நிகழ்வுகளுக்கு தமிழ், சிங்கள மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர் என்று ஆர்ப்பாட்டக்களத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.





