
யாழ். மாவட்டத்தில் இருந்து மூன்று வருட காலம் குறிப்பிடப்பட்டு, வெளிமாவட்டங்களில் சென்று கடமையாற்றிய ஆசிரியர்கள், இடமாற்ற நடைமுறையூடாக மீண்டும் அவர்கள் தமது சொந்த வலயங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதுதொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவிக்கையில்,
இதே சேவையை உடைய ஒரு சிலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இடமாற்றச் சபை நடைபெறுவதற்கு முன் செல்வாக்கினால் ஒரு சிலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதனடிப்படையில், வடமாகாணக் கல்விப் பணிப்பாளரினால் மிகப் பாரதூரமான பாரபட்சங்கள் பல நடைபெறுகின்றது.
இதனைச் சுட்டிக்காட்டி, நாங்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கும், வடமாகாண ஆளுநருக்கும் எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியிருந்தோம்.
இதையடுத்து, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால், இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு தெளிவான பார்வை இல்லை.
குறிப்பாக, ஒரு வருடாந்த இடமாற்றம் என்பது டிசம்பர் மாதங்களில் வழமையாக நடைபெறுவது. ஜனவரி மாதம் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதாக இருந்தால், டிசம்பர் மாதத்திற்கிடையில் இடமாற்றச் சபையும், மேன்முறையீட்டு சபையும் நடந்து, இடமாற்றங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு தை மாதம் பாடசாலை செயற்பாடுகள் சுமுகமாக நடைபெறும்.
ஆனால், இந்த வருடம் ஏப்ரல் மாதம் கல்வி ஆண்டு ஆரம்பித்திருக்கின்ற இடத்திலே, ஏப்ரல் மாத்திற்கு இடையிலே மேன்முறையீடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை இந்த மேன்முறையீட்டுச் சபை கூட்டப்படவில்லை.
இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிய போது, அவர்கள் இதுதொடர்பான ஒரு தெளிவின்மை பதிலை வேண்டுமென்றோ, நியாயப்படுத்தும் விதமாகவோ, கொரோனாச் சூழலை காரணம் காட்டி பூசி மொழுகியுள்ளனர்.
கல்வி அமைச்சரின் செயலாளரும், வடமாகாண கல்வி பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு துணை போகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், அவர் வடமாகாண கல்விப் பணிப்பாளாராக செயற்படுகின்றாரா? அல்லது யாழ் மாவட்டத்திற்குரிய கல்விப் பணிப்பாளராக செயற்படுகின்றாரா? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.
இவற்றை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 22 ஆம் திகதி வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக
பாதிக்கப்பட்ட ஆசிர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. இந்த தொழிற்சங்கப் போராட்டத்திற்கு பாதிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளது.