
கொழும்பு, ஏப் 10
நாட்டில் நிலவும் அபாயகரமான சூழ்நிலை காரணமாக வேறு நாடுகளுக்குச் செல்லும் நோக்கத்தில் கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதில் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் வீடுகள் ,வாகனங்களை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாடு செல்வதற்காக பணத்தை தேடிக்கொள்ள இவ்வாறு வீடு வாகனங்கள் விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்நாட்டில் வசிக்கும் தமது நெருங்கிய உறவினர்களை தாங்கள் வசிக்கும் நாட்டுக்கு அழைத்து கொள்வதும் அதிகரித்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதென அறிவிக்கப்படுகிறது.