புத்தாண்டு பரிசுகள் – தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களிடம் வேண்டுகோள்

புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வரும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளருமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ்கன இது குறித்து மீள ஞாபகப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்டமிட்ட குழுக்கள், பண்டிகை காலத்தில் இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபட தயாராவது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதன் பின்னணியில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துடன் பரிசுப் பொதியும் உள்ளதாக தகவல் வழங்கி, குறித்த பெறுமதியான பரிசில்களை பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கிலக்கம் ஒன்றினை கொடுத்து அதற்கு ஒரு தொகை பணம் வைப்பிலிடச் சொல்லி இந்த மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களை மையப்படுத்தி பொலிசார் பொது மக்களை எச்சரித்துள்ளதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *