பொருளாதார நெருக்கடியினால் வேலைத்திட்டத்தை செய்ய முடியவில்லை: யாழ் மாநகர முதல்வர்

யாழ்ப்பாணம், ஏப் 10

பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பினால் மாநகர சபை தீர்மானித்திருந்த சில வேலைத்திட்டங்களை செய்ய முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சமகால நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மாநகர முதல்வர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் நகர குளத்தை புனரமைக்க 40 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கியிருந்த போதும் அதனை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் செய்ய ஆரம்பித்தால் 80 மில்லியன் ரூபா செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஆஸ்பத்திரி வீதி அகலிப்பு, ஸ்ரான்லி வீதி அகலிப்பு போன்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி மூலங்கள் இருந்தபோதும் கட்டட பொருட்களுக்கான தட்டுப்பாடு பொருட்களுக்கான விலை உயர்வு எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில வேலைத்திட்டங்கள் செய்ய முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

நிதி மூலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு திட்டவரைவு இறுதி செய்யப்பட்டு அங்குரார்ப்பணம் மட்டுமே செய்யப்படவிருந்த நிலையில் துரதிஷ்டவசமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை ஒத்திவைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *