வெட்கம் கெட்ட கோட்டா அரசு! – போட்டுத் தாக்குகின்றார் பொன்சேகா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி இரவு பகல் பாராது மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், ஜனாதிபதியும், அரசும் பதவி விலகாமல் அதிகாரத் திமிருடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது அவர்களுக்கு வெட்கக்கேடான செயலாகும்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் பொன்சேகா எம்.பி. கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனக்கு 69 இலட்சம் மக்களின் ஆணை கிடைத்தது என்ற இறுமாப்புடன் ஜனாதிபதி கோட்டாபய பதவியில் அமர்ந்திருக்கின்றார்.

அதேவேளை, தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உண்டு என்ற திமிருடன் அரசு செயற்படுகின்றது.

ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைக் கூட இந்த அரசு இழந்துவிட்டது. ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய மக்களும் இன்று அவருக்கு எதிராகக் களமிறங்கிப் போராடி வருகின்றனர்.

பதவி ஆசையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கமாட்டார்கள். மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் அவர்களுக்குத் தூசு போல் தென்படலாம்.

ஆனால், நாளாந்தம் வலுப்பெறும் மக்கள் போராட்டங்கள், ஜனாதிபதியையும் அரசையும் விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *