
எரிபொருள் விநியோக நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் தலைமையில் எரிபொருள் விநியோக நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு, மக்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் யாழ் மாவட்ட விவசாயிகள், கமநல சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரை கடிதத்தை பெற்று, குறிப்பிட்ட எரிபொருள் விநியோக நிலையங்களில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கிணங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட விவசாயிகளின் எரிபொருள் கோரிக்கை தொடர்பாக அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்டு, இவ்வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், யாழ் மாவட்ட மீனவர்களுக்கான எரிபொருள் விநியோக அட்டையை யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களமும், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபன வடபிராந்திய அலுவலமும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இலகுபடுத்தும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.