
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டுக்கு தப்பிச் செல்வோரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடல்வழியாக மக்கள் வெளியேறுவதை தடுக்க கடற்படையினர் மற்றும் இரணுவத்தினர் மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை மற்றும் வருமானம் இன்மை காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பியோடி வருகின்றனர்.
இதன்காரணமாக இராஜதந்திர ரீதியில் இலங்கை அரசுக்கும் அழுத்தங்கள் அதிகமாகும் என்பதால், இவ்வாறு தமிழகத்துக்குத் தப்பியோடுவோரைத் தடுப்பதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதிக்குப் பின்பு இலங்கையில் இருந்து 39 பேர் தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் , இது தொடர்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கடற்படையினரின் அதிகாரிகள் கல்லந்துரையாடியதுடன் இராணுவ அதிகாரிகளும் சந்திப்பை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.