
எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் என சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், நீர்ப்பாசன பொறியியலாளரின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் படி கடந்த வருடங்களைப் போன்று தேவையான தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது. இதற்கு காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே பொலிஸாரினால் திடீர் சோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர்கள் சம்மந்தமாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இச் சோதனையின் போது கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன் உரிய நபருக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.- என்றுள்ளது.