நாங்கள் தோற்றுப்போனவர்கள் கிடையாது. தற்சார்பு பொருளாதாரத்துடன் நிமிர்ந்து நிற்க கூடிய அத்தனை வளங்களும் தமிழர்களிடம் உள்ளது. ஆகவே எங்களை நாங்களே ஆளக்கூடிய நிலையை எங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் வடகிழக்கு ஒருங்கிணைப்பாளரும், நல்லூர் சிவகுரு ஆதின முதல்வர் தவதிரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அறநெறி வகுப்புகளை மீள புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாகாண முன்னேற்றக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த அறநெறிப்பாடசாலைகளை புனரமைப்பு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பெரியசுவாமி அறநெறிப்பாடசாலை நடவடிக்கைகள் புனரமைப்புச் செய்யப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தென்கையிலை ஆதின முதல்வர் சுவாமி அகத்தியர், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் வடகிழக்கு ஒருங்கிணைப்பாளரும் நல்லூர் சிவகுரு ஆதின முதல்வர் தவதிரு வேலன் சுவாமிகள், தென்கையிலை ஆதின இளையபட்டம் திருமூலர் தம்பிரான் சுவாமிகள், வடகிழக்கு மாகாண முன்னேற்றக்கழகத்தின் வாகரை பிரதேச இணைப்பாளர் பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சமய சொற்பொழிவுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்றதுடன் விசேட உரையும் இடம்பெற்றது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள்,
வடகிழக்கு தமிழர்களின் தாயகம். வரலாற்று பாரம்பரிய மக்கள் எமது பகுதியில் நாங்கள் சுயநிர்ணயுடன் கூடிய உரிமையுடன் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.
எங்களது இனத்தை அழிக்கின்ற முயற்சியாகயிருக்கலாம், ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்பின் ஊடாக நிலங்களை பறித்தெடுக்கின்ற செயற்பாடுகளாகயிருக்கலாம், வடகிழக்கில் இயற்கை வளங்கள் கொட்டிக்கின்றன.
அவற்றினை பறித்தெடுத்து இயற்கை சமநிலையினை குழப்புகின்ற செயற்பாடுகளாகயிருக்கலாம் இவைகள் நடக்கும் போது அரசியல் கட்சி என்ற பேதங்கள் மறந்து தமிழர்களாக நாங்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும்.
அறத்திற்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுக்கும்போது நாங்கள் யாருக்காகவும் அச்சம்கொள்ளத்தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக நின்று குரல் கொடுக்க வேண்டும்.
தமிழ் தேசியத்தின்பால் நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்படவேண்டும். இந்த பகுதிகளில் நடைபெறும் அநீதிகளை தட்டிக்கேட்க வேண்டும். அவ்வாறானதொரு சூழலிலேயே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி போராட்டம் நடைபெற்றது.
மக்கள் தன்னெழுச்சியாக தாங்களாக திரண்டார்கள். இனத்திற்கான விடுதலை உணர்வு என்பது எமது மக்களின் மத்தியில் இன்றும் இருக்கின்றது என்பதை ஒட்டுமொத்த உலகுக்கும் எடுத்துக்காட்டிய நிகழ்வு அந்த நிகழ்வு.
நாளை தலைவர்களாக வரவுள்ள பிள்ளைகள் தங்களது அறிவினையும் கல்வியையும் மேம்படுத்தும் அதேநேரம் அறம் என்று சொல்லப்படும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாகயிருக்க வேண்டும்.
ஒரு கண் சமய வாழ்வாகயிருந்தால் ஒரு கண் தமிழாகயிருக்கவேண்டும். இவ்வாறான ஒரு வாழ்க்கையினை வாழும்போது இந்த மண்ணில் விடுதலையினைப்பெற்று அனைவரும் சுதந்திரமாக சுயநிர்ணய உரிமையுடன் எங்களது தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற,எங்களை நாங்களே ஆளுகின்ற, பொருளாதார ரீதியில் தற்சார்பு பொருளாதாரத்தில் வளரக்கூடிய அத்தனை வளங்களும் எங்களிடம் உள்ளது. நாங்கள் தோற்றுப்போனவர்கள் கிடையாது. அந்த அறம் என்றும் வெற்றிபெற்றேயாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
