நாட்டிலுள்ள தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி அரசாங்கமானது, ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை அகற்றிவிட்டு தனது ராணுவத்தையும் தொல்பொருள் திணைக்களத்தையும் அனுப்பி, அங்கே புத்த விகாரை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் கோவிட் 19 தடுப்பு தேசிய செயல் அணியிலிருந்து வைத்தியர்கள் உட்பட பலர் தற்போது அதிலிருந்து விலகிச் செல்கின்றனர்.
அதற்கான காரணம் அரசாங்கத்தினுடைய சுகாதார நடைமுறைகளில் உள்ள குறைபாடும் சுகாதாரத்துறை தனது செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
மேலும், பாராளுமன்றத்தில் இருக்கின்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தினுடைய நீதித்துறை வரை செல்ல வேண்டியும் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தூதுவராக செல்கிறார் .இதுபோன்று உலகத்தில் எந்த நாட்டிலும் நடந்தது இல்லை என்றும் இதுபோன்ற துர்பாக்கிய நிலைக்கு இலங்கை தற்போது தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த நாட்டினுடைய ராஜதந்திர நிலை மற்றும் அரசியல் போக்கு என்பனவும் கேள்விக்கு உட்பட்டு நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களை நம்பி சிங்கள மக்கள் வாக்களித்து இந்த நாட்டுக்குரிய ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் தெரிவு செய்தார்கள்.ஆனால் அந்த மக்களே இன்று நாட்டில் சீனிவிலையாலும் பால்மா இன்மையாலும் பருப்பு விலை ஏற்றம் காரணமாகவும் உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் இயற்கை உரம் உற்பத்தி தடுக்கப்பட்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். செயற்கை கிருமிகள் புகுத்தப்பட்டு உருவாக்கப்படும் இந்த கிருமிகளால் எங்களுடைய மண்வளத்தை மீண்டும் கொண்டுவர எங்களுக்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படப்போகிறது .
இந்தக் அரசாங்கமானது கொரோனா நோய் காரணமாக வைத்து கீழ் தரமான செயற்பாடுகளை அரங்கேற்றி வருகின்றது. இந்த நாடானது தற்போது ஆள முடியாதவர்களால் ஆளப்படும் நாடாகவும் ஆட்சி இல்லாத நாடாக மாறி வருகின்றது. எனவும் மேலும் அவர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.





