சிறைக்கைதிகள் 89 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறிய தவறுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 89 பேரே இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடுதலை பெற்ற சிறைக்கைதிகளுக்குள், மஹர சிறைச்சாலையில் 10 பேரும், போகம்பர சிறைச்சாலையில் 07 பேரும் வெலிக்கடை சிறைச்சாலையில் 05 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பொது மன்னிப்பு கிடைத்த சிறைக் கைதிகள் கொவிட் பரிசோதனையின் பின்னர் தொற்றில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் விடுக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய, சிறைக் கைதிகளின் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கவுள்ளதாகவும் அவற்றை பரிசோதித்த பின்னர் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளார்கள் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
அவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினரால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.