‘வடக்கின் பெரும் போர்’ துடுப்பாட்ட போட்டி இன்று! – பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – சென். ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை வரை தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ். கே. எழில்வேந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பொலிஸாருடனான கலந்துரையாடலை தொடர்ந்தே பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரு பாடசாலைகளுக்கும் இடையிலான இந்தத் துடுப்பாட்ட போட்டி 118 வருடங்கள் பழமையானது. அத்துடன், வடக்கின் துடுப்பாட்ட வரலாற்றில் முதல் போட்டித் தொடரும் இதுவாகும்.

115 ஆவது ஆண்டாக இந்த வருடம் நடக்கும் போட்டியில், இதுவரை சென். ஜோன்ஸ் கல்லூரி 37 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 28 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

41 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. 7 போட்டிகளுக்கு முடிவு காணப்படவில்லை. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவையாக இருப்பதால் இன்று ஆரம்பிக்கும் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *