சிறுமியின் பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-பிரபா கணேசன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், ரிஷாட்டை குறிவைத்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், சிறுமியின் பெற்றோர்களுக்கு தகுந்தப் பாடம் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமிக்கு ஏற்பட்ட அவலம் கவலைக்குரியதெனவும். இதுத் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டிக்கப்பட்டால் மலையக பெற்றோர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர், சிறுமியை வேலைக்கு அனுப்பியமைக்கு அவரது தாயார் கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

ரிஷாட்டை குறிவைத்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். எனினும் வீட்டின் தலைவர் என்றவகையில் இச்சம்பவத்துக்கு ரிஷாட் பதிலளிக்க வேண்டும்.

அரசியல் ரீதியான போராட்டங்கள் தேவையற்றது எனவும் தெரிவித்துள்ளதோடு, மலையக சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்களது அறிவு வளர்க்கப்பட வேண்டும். இதற்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *