தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலம் காலமாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் “தாய்நிலம்” நில அபகரிப்பு, இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று என்ற ஆவணப் படம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு (இலங்கை நேரம்) திரையிடப்படவுள்ளது.
இந்நிகழ்வை, நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
மேலும், இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவணப் பட திரையிடல் நிகழ்வை தொடர்ந்து ‘இலங்கையின் இனஞ் சார்ந்த நில ஆக்கிரமிப்பு முறைகள், விளைவுகள் மற்றும் தமிழ் நில பாதுகாப்பு’ என்ற இணையவழி கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இந்தியாவில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார் அம்மையார், சென்னை பல்கலைக்கழ பேராசிரியர் ராமு மணிவண்ணன், அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், இந்நிகழ்வில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பேராசிரியர் ஓரன் யிப்டசெல் அவர்கள் முதன்மை உரையாற்றுவார்.
இந்த குழு விவாதத்தை தொடர்ந்து ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கனடாவின் புகழ்பெற்ற இசை கலைஞரான ஷான் வின்சென்ட் டி போலின் இசை நிகழ்வு இடம்பெறும்.
ஆவண படம் திரையிட்ட பின்னர், அந்த படம் தொடர்பிலான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் ஒன்றில் இளையோர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த கலந்துரையாடலில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்துகொள்வர்.
“தாய்நிலம்” என்ற இந்த ஆவண படத்தை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும் என்றும் அதன்பின்னர் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் இந்த நிகழ்வையும் ஆவண பட வெளியீடையும் ஏற்பாடு செய்துள்ள நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5. 30 மணிமுதல் சில மணி நேரங்களுக்கு உங்கள் நேரத்தை தயவுசெய்து ஒதுக்கிவைத்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று நீதியரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Zoom Link: https://bit.ly/LandGrab2021
Webinar ID: 841 5154 5684
Passcode: TH2021