காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரை மற்றும் பேருவளையிலிருந்து காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.