
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக தமிழ் பேசத் தெரியாத ஒருவரை அரசாங்கம் நியமித்துள்ளமையை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 95% க்கும் அதிகமான மக்கள் தமிழ் மொழியையே பேசுகிறார்கள் என்பதை மேற்கோளிட்டு அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் பேசத்தெரியாத அதிகாரியை மாவட்ட செயலாளராகவும் அரச முகவராகவும் நியமிப்பது பொருத்தமற்றது என்றும் அது ஜனநாயக விரோதமான செயற்பாடு என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக மூத்த திறமையான மற்றும் தமிழ் பேசக்கூடிய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிடத்தில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கு உதவும் வகையில் ஆட்சி அதிகாரங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.