கணவனும் மனைவியும் சேர்ந்து பெண் ஒருவரை தாக்கியபோது அதனை தடுத்து சமரசம் செய்யச் சென்ற நபர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்ற சம்பவமொன்று நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வை. அஹமட் வித்தியாலய வீதியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று பெண் ஒருவரின் அழுகுரல் சப்தம் கேட்டபோது அதனை செவியுற்ற நபர் ஒருவர் அங்கு சென்றுள்ளார்.
Advertisement
அப்போது கணவனும் மனைவியும் சேர்ந்து பெண் ஒருவரை தாக்கியுள்ளனர். அதனை தடுத்து நிறுத்தி சமரசம் செய்யச் சென்ற அந்நபர் மீது முரண்பட்டுக் கொண்ட கணவனும் மனைவியும் தாக்குதல் நடத்தி பின்னர் அந்நபரை மனைவி பிடித்துக் கொண்டிருக்க கணவன் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் கழுத்திலும் வயிற்றிலும் கத்திக் குத்துக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கத்தியால் குத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது மனைவியும் மற்றைய பெண்ணும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது