‘ஆசிரியர் கொவிட் கொத்தணி’ ஆபத்து விரைவில்-சன்ன ஜயசுமன எச்சரிக்கை

ஆசிரியர் கொவிட் கொத்தணியொன்று விரைவில் உருவாகக்கூடும் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, அவர் மேலும் கூறுகையில்,

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இதுவரை 2 வாரங்கள் கூட முழுமை பெறவில்லை. முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 வாரங்கள் ஆகும் போது உடலில் எதிர்ப்பு சக்திகள் உண்டாகும்.

எனவே, தற்போது வீதியில் கூட்டமாக இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு ஆசிரியரின் உடலிலும் கொவிட் எதிர்ப்புடல்கள் உருவாகியிருக்காது.

டெல்டா திரிபு பரவிவரும் காலக் கட்டத்தில் ஆசிரியர்கள் மிகவும் ஆபத்தான வகையில் செயற்படுகின்றனர். இதன் பிரதிபலனாக இன்னும் ஓரிரு வாரங்களில் ஆசிரியர்கள் கொத்தணி ஒன்று உருவாவதை நாம் காணக்கூடியதாக இருக்கும் என்றார்.

இதேவேளை, கடந்த மூன்று வாரங்களாக நாட்டில் பதிவான கொவிட் மரணங்கள் பற்றிய ஆய்வில், கொவிட் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

நோய்த்தொற்று மற்றும் திரிபு தொடர்பில் துல்லியமாக அடையாளம் காண பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத பின்னணியில் மற்றொரு கொரோனா அலை ஏற்படக்கூடும் என்று மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, அளுத்கம – கலுவாமோதர, முல்லபிட்டிய, ஹெட்டிமுல்ல மற்றும் மொரகல்ல பகுதிகளில் வசிக்கும் 143 பேர் எழுமாறான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, 47 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *