ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான ஆராய்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி அப்ரூ இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மனுவைத் தொடர முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று பிடியாணை பிறப்பித்தார்.

சந்தேகநபர் தாம் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகமான அயேஷா ஜினசேன நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைத்தார்.

பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி சந்தேநபர் தங்கியிருந்த வெள்ளவத்தை, வத்தளை, பத்தரமுல்லை, நுகேகொடை, உடாஹமுல்ல ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை சோதனைக்கு உட்படுத்திய போதும் அவர் அங்கிருக்கவில்லை என மேலதிக மன்றாடியார் நாயகம் அயேஷா ஜினசேன நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினார்.

இதன்காரணமாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு அவர் கோரினார்.

இதனை ஆராய்ந்த போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த பிடியாணையை பிறப்பித்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *