யாழில் வீட்டின் அருகில் தங்கம் இருப்பதாக தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது

வீடொன்றில் தங்கம் இருப்பதாக கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய தோண்ட முற்பட்ட சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவமானது இன்று (11) கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 06 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் எடுபட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பதுளை, மகரகம, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 06 சந்தேக நபர்கள் பல்வேறு புதையல் தோண்டும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் ஏழு பேரும் விசாரணைகளின் பின் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் திலீப் என் லியனகேயின் கீழ் உள்ள தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *