குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டம்!

நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டது.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற நீர்வழங்கல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியின் கீழ் செயற்படுத்தப்படும் நீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு ஜனாதிபதி கேட்டறிந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியில் தற்போது 2337 பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நீர் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் பல வெற்றிகரமான முன்னேற்றம் கண்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 467,808 புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் 2025ஆம் ஆண்டாகும்போது, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 5,946,352 ஆக இருக்கும்.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக, தேசிய சமுதாய குடிநீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம், கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, முன்மொழியப்பட்ட 84 திட்டங்கள் உட்பட புதிய கிராமம்சார் சமுதாயக் குடிநீர் திட்டங்கள் 704 செயற்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் நீர்வளச் சபை சட்டத்தை திருத்துவது மற்றும் தேசிய பொது நீர் வழங்கல் திணைக்களச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வர்த்தக நோக்கில் செயற்படுத்தப்படும் பெரிய அளவிலான குழாய் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், குழாய் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளை முழுமையாக கணக்கெடுக்கவும், பாரியளவிலான நிலங்களை துண்டாக்கும்போது நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு அவசியமான திட்டங்களை தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

2022 ஏப்ரல் மாதத்திற்குள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட அனைத்து பாவனையாளர்களும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய தொகை கிட்டத்தட்ட 7,500 மில்லியன் ரூபாய் ஆகுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *