கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று காலை இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் அப்பிள்டனிடம் கிழக்கு மாகாணத்தில் முதல் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதனூடாக மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கு உதவுமாறும் ஆளுநர் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
தூதுவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு இன்று காலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான பல விடயங்கள் தொடர்பில் ஆளுநரும் தூதுவரும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் மாகாணத்தில் செயல்படுத்தப்பட்ட தற்காலிக “நிலையான பால் பண்ணை திட்டத்தை” நியூசிலாந்து தூதுவர் பாராட்டினார். அதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தூதுவர் இச் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இலங்கையில் நியூசிலாந்து தூதரகம் ஸ்தாபிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்தை கடந்துள்ளதுடன், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் அப்பிள்டன் ஆவார்.

கிழக்கு முதலீட்டில் பங்களிப்புச் செய்ய நியூசிலாந்து தூதுவரை ஆளுநர் இதன்போது அழைப்பு விடுத்தார்.
தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இயற்கை விவசாயம் ஏன் தோல்வியடைகிறது, என்று நியூசிலாந்து தூதுவர் கேட்டார். அரசியல் மயப்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த வேலைத்திட்டம் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி.வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிற செய்திகள்