
உக்ரைன், ஜுன் 16
பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இன்று யுக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளனர். ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக போராடும் யுக்ரைனுக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இவ்விஜயம் அமைந்துள்ளது.
பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன், ஜேர்மனியின் சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸ், இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி ஆகியோர் யுக்ரைனின் தலைநகர் கியேவ்வுக்கு இணைந்து பயணம் செய்தனர். போலந்து வழியாக ரயில் மூலம் யுக்ரைனின் கியேவ் நகரை இவர்கள் சென்றடைந்தனர்.
கியேவ் நகரில் ருமேனிய ஜனாதிபதி குளோஸ் லோஹானிஸும் அவர்களுடன் இணைந்து கொண்டார். யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலென்ஸ்கியை அவர்கள் சந்தித்து கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட இர்பின் நகருக்கும் பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலிய தலைவர்கள் பயணம் செய்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான யுக்ரைனின் கோரிக்கை தொடர்பில், எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தீர்மானிக்கவுள்ள நிலையில் இவ்விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை நேட்டோ உச்சிமாநாடு எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் ஸ்பெய்னின் மட்றிட் நகரில் நடைபெறவுள்ளது.