பிஸ்கட் தருவதாக கூறி 5 வயது சிறுவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம்

கொழும்பு, ஜுன் 16

ஐந்து வயதான சிறுவனை, பிஸ்கட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து சென்று, கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 32 வயதான ஒரு பிள்ளையின் தந்தைக்கு 9 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ( 16) குறித்த தீர்ப்பை அறிவித்தது.

இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த குற்றம் தொடர்பிலேயே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க இந்த தீர்ப்பை அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர், 5 வயது சிறுவனை ஏமாற்றி, தனது பாட்டியின் வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்று கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை சாட்சிகள் ஊடாக சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அறிவித்து நீதிவான் நவரட்ன மாரசிங்க திறந்த மன்றில் தெரிவித்தார்.

இவ்வாறான குற்றங்களுக்கு இலகு தண்டனைகள் அன்றி, அதிக பட்ச தண்டனையே அளிக்கப்படல் வேண்டும் என இதன்போது நீதிபதி மன்றில் குறிப்பிட்டார். அதன்படி, குற்றவாளிக்கு 9 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, 15 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார். அந்த அபராதத்தை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் என நீதிபதி தீர்ப்பில் அறிவித்தார்.

இதனைவிட, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 2 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்த தவறின் மேலும் ஒரு வருட சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி  பில் வைத்து, அப்போது 18 வயதான பிரதிவாதி ( தற்போது குற்றவாளியான 32 வயது நபர் ) 5 வருடங்களும் 10 மாதங்களுமான சிறுவனை, அவன் விளையாடிக்கொண்டிருந்த போது பிஸ்கட் தருவதாக கூறி ஏமாற்றி, தனது வயோதிப பாட்டியின் வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தண்டனை சட்டக் கோவையின் 365 ( அ) 2 ( ஆ) ஆகிய பிரிவின் கீழ் சட்ட மா அதிபரால் இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *