வீடுகள் தோறும் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க உடனடி நடவடிக்கை

வேலணை,ஜுன் 16

தீவக பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவு பிரச்சினைகளை வழங்குவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அக்கறை செலுத்தியுள்ளமைக்கு பாராட்டு தெரிவித்துள்ள வேலணை பிரதேச சபை தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போது அன்றாட உணவு தேவையை நிறைவுசெய்து கொள்வதற்கான மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இந்நிலையில் எமக்கான உணவுப் பொருட்காளை நாமே உற்பத்தி செய்ய எமது பிரதேசத்திலுள்ள வளங்களை முழுமையாக பயன்படுத்தவும் அதற்கான திட்டமிடலையும் துரிதமாக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது ஆளுகைக்குள் உள்ள பகுதிகளில் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகளூடாக  கிடைத்த நிதியை இந்த திட்டத்திற்கு விதைகளையும் கன்றுகளையும் கொள்வனவு செய்து வட்டாரங்கள் ரீதியாக பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று(16) தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் சபையின் 53 ஆவது மாதாந்த கூட்டம் நடைபெற்றது. இதன்போது சபையின் உறுப்பினர் வசந்தகுமாரால் நாட்டில் தற்போது உருவாகியுள்ள வாழ்வாதார பொருட்களுக்கான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான பங்களிப்பை பிரதேச சபையும் அதன் உறுப்பினர்களும் பங்களிப்பது தொடர்பில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இது தொடர்பில் கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறித்த விடயத்தை சபையின் முழுமையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதுடன் உறுப்பினர்கள் தத்தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். இதன்போது உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கூறுகையில் – பிரதேச மக்களிடம் வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேசத்தின் நிலத்தன்மைக்கு ஏற்றவகையில் மக்களின் ஆர்வத்தை பொறுத்தும் முன்னெடுப்பது அவசியமாகும்.

அத்துடன் குறித்த திட்டத்தை வெற்றியடைய செய்வதற்கான பொறிமுறைகளை சபையின் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பதுடன் வீட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதுடன் அத்திட்டத்தில்  சிறப்பாக பங்கெடுக்கும் செய்கையாளர்களுக்குள் வெற்றியாளர்களை தெரிவுசெய்து சிறந்த வீட்டுத்திட்ட செய்கையாளர் என்ற கௌரவத்தை வழங்குவதனூடாகவும் வீட்டு தோட்ட செய்கையை ஊக்குவித்து சிறப்பான இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மண்ணெண்ணை விநியோகத்தையும்  சீரான வகையில் முன்னெடுப்பது அவசியம் என்றும் இதுவும் விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமானதொன்று என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுகுறித்து சபையின் உறுப்பினர் கேமதாஸ் கூறுகையில்,

கடந்தகாலத்தில் இந்த முயற்சியில் ஏற்பட்ட தவறை ஆராய்ந்து இம்முறை அதற்கான தீர்வுகளுடன் உற்பத்தியாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்புகளை வழங்குவதனூடாக நாம் ஓரளவேனும் அடைவு மட்டத்தை எட்டமுடியும் என்று இதனூடாக தமக்கான உணவு பொருட்களை ஓரளவெனும் ஒவ்வொரு குடும்பத்தினரும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேநேரம் சபையின் உறுப்பினர்களால் தீவகப்பகுதி குறிப்பாக வேலணை பிகுதியில் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் கைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் தரிசு நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக சபையிலுள்ள ஒரு தொகுதி நிதியை ஒதுக்கி விவசாய குறிப்பாக வீட்டு தோட்டங்களை விரிவாக்கம் செய்ய துரித நடவடிக்கையும் விழிபுணர்வும் செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தனர். இதேவேளை வீட்டு தோட்டங்களையும் விவசாய நடவடிக்கையையும் முன்னெடுப்பதற்கு பெரும் தடையாக இருக்கும் கட்டாக்காலி கால்நடைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகும் என்றும் உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

எனவே பிரதேச சபையின் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி கட்டாக்காலிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்  வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் வீதி போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கட்டாக்காலிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு சபையினால் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை சட்டவிரோத மணலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாமையால்தான்  தொடர்ந்தும் வளங்கள் சுறண்டப்படுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படுகின்றது என்றும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் மண்டைதீவு பொலிஸ் காவலரணில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக குறித்த பிரேரணையில் கடந்தகாலத்தில் வேலணையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகள், பால் உற்பத்தி போன்றவற்றை மிளவும் இவ்வாறான செயற்பாடுகளூடாக முன்னெடுக்க வேண்டும் என்றும் சபையின் உறுப்பினர் வசந்தகுமாரால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *