
கொழும்பு,ஜுன் 16
கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு புதிய நகர்சேர் கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்திலிருந்து(17) பிரதி வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறைக்கு இந்த இரவுநேர நகர்சேர் கடுகதி ரயில், சேவையில் ஈடுபடவுள்ளது
வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இரவு 10 மணிக்கு புறப்படும் குறித்த ரயில், அடுத்தநாள் அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்து 5.30க்கு புறப்பட்டு காங்கேசந்துறையை சென்றடையும்.
பின்னர் அந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு தெஹிவளையை சென்றடையும்.
குறித்த ரயிலுக்கான ஆசனப் முன்பதிவுகளை, யாழ்ப்பாண ரயில் நிலையத்திலும், ஏனைய ஆசன முன்பதிவுகள் செய்யக்கூடிய ரயில் நிலையங்களிலும் செய்யமுடியும் என யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் குறிப்பிட்டார்.